ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நீதிமன்ற வளாகத்தில் 14 வயது சிறுமி தொடர்பான அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியை போலீஸார் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் தனது அத்தை வீட்டுக்குச் சென்றிருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமி அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் சிறுமி பதற்றமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் இருந்தபோது உடல்நிலை சரியில்லை என்று சிறுமி கூறியதாகவும், அவருடன் இருந்த பெண் போலீஸ் அதிகாரி அவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி வெளியே காத்திருந்த நிலையில், கழிப்பறைக்குள் இருந்த சிறுமி ஜன்னலைத் திறந்து கீழே விழுந்துள்ளார். மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுமி, தரையில் நேரடியாக விழாமல் கீழ்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கூரை மீது விழுந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை தவிர்க்கப்பட்டாலும், சிறுமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமி விழுந்த சத்தம் கேட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனடியாக வெளியே வந்தனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற ஜன்னலில் பாதுகாப்புத் தடுப்பு அல்லது கம்பிகள் இல்லாததும் போலீஸாரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாகவும் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, 14 வயது சிறுமி கர்ப்பமானதற்கான பின்னணி குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் முன்பு காணாமல் போனது, பின்னர் அத்தை வீட்டில் இருந்தது மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை ஆகிய அனைத்து விவரங்களும் விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கை வெளியான பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் உடல்நிலை மற்றும் இந்த சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
