பீகார் மாநிலம் பக்வா பகுதியில், மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுபாஷ் யாதவ் என்பவர் தனது மனைவி ரீனா தேவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பக்வா ஏடிஜே-4 நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரா பஜார் டோலா முஸஹரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் எருமை தொடர்பாக தம்பதியிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சுபாஷ் தனது மனைவியை கொலை செய்ததாக அரசு தரப்பு தெரிவித்தது. கொலைக்குப் பிறகு தடயங்களை அழிக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், உடல் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு தனித்தனி சாக்குப் பைகளில் போட்டு வீசப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்பட்டது.
பின்னர், உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் கிடைத்த பெட்டியின் சாவியை அடிப்படையாகக் கொண்டு அவர் ரீனா தேவி என்பது அடையாளம் காணப்பட்டது. இந்த வழக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களுடன், சாட்சிகளின் வாக்குமூலங்களையும் போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலைக்காக ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், தடயங்களை அழித்ததாக 201-வது பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கியமாக, தாயை இழந்து தந்தையும் சிறைக்கு சென்றுள்ள இரு சிறார்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிகார் அரசின் பராமரிப்பு திட்டத்தின் கீழ், இரு குழந்தைகளுக்கும் மாதந்தோறும் தலா ரூ.4,000 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டிஎல்சி மறுவாழ்வு திட்டத்தின் பயனையும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விரைவு விசாரணை நடத்தப்பட்டதாகவும், பக்வா மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வழக்கை நேரடியாக கண்காணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
