கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தை  சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில், அந்தப் பெண்ணின் சொந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காகத் தனது பெற்றோர் வீட்டுக்குத் திருவிழாவுக்குச் சென்றுள்ளார் அந்த இளம்பெண். ஆனால், திருவிழா முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மனைவி வராததால் சந்தேகமடைந்த அவினாஷ், அவரைத் செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், மனைவி தரப்பிலிருந்து முறையான பதில் எதுவும் வரவில்லை. இதனால் கவலையடைந்த அவினாஷ், தனது பெற்றோருடன் நேரடியாக சென்று தனது மனைவியைச் சந்தித்து, தங்களது இல்லத்திற்குத் திரும்பி வந்து குடும்பம் நடத்தும்படி அன்போடு அழைத்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணோ அவினாசுடன் குடும்பம் நடத்தவே முடியாது என்றும், அவருடன் வாழ்வதில் விருப்பமில்லை என்றும் முகத்திலடித்தது போல் கூறியுள்ளார். காதலித்து கரம் பிடித்த மனைவியின் இந்த திடீர் பிடிவாதமும், மறுப்பும் அவினாஷை மனதளவில் கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக மனவேதனையில் தவித்து வந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், தங்கள் மகன் அவினாஷ் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு கதறித் துடித்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார், அவினாஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மனைவியின் மறுப்புக்கும் தற்கொலைக்கும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.