கர்நாடக வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை அம்மாநில வனத்துறையினர் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற சம்பவம், எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம், மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம் என்றும் அவர் மிகக் காரமாகச் சாடியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தை ஏனோதானோவென்று கடந்து செல்லாமல், சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி நேரடியாகக் கொலை வழக்காகப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அம்மாநில அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுத்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளையில், தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்காமல் கர்நாடக அரசாங்கத்திற்குத் தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலில், அவர்களுக்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகையையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியையும் உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எல்லை யோரப் பகுதிகளில் தொடர்ச்சியாகத் தமிழர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் தற்போது தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
