இந்தியாவில் ரெயில் பயணம் என்பது அன்றாட வாழ்க்கையின் முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் உலகின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இன்னும் சில நாடுகளில் ரெயில் சேவையே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சில நாடுகளில் ரெயில் பாதைகள் அமைக்கப்படாத நிலையில், சில இடங்களில் பழைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பூட்டான் முக்கியமான ஒன்று. இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் தற்போது ரெயில் சேவை இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் இந்திய ரெயில்வேயுடன் இணைக்கும் வகையில் ரெயில் பாதை அமைக்கும் திட்டங்கள் குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வரும் காலங்களில் பூட்டானின் போக்குவரத்து அமைப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அன்டோரா நாட்டிலும் ரெயில் பாதை இல்லை. சிறிய பரப்பளவு மற்றும் குறைந்த மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால் அங்கு ரெயில் சேவை உருவாகவில்லை. ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள பிரான்ஸ் நாட்டின் ரெயில் சேவையைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதற்காக பேருந்து போக்குவரத்து வசதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல் லிபியா, சைப்ரஸ், குவைத் மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன. லிபியாவில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு ரெயில் சேவை நீண்ட காலமாக இயங்கவில்லை. சைப்ரஸில் பழைய ரெயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. குவைத்தில் எதிர்கால ரெயில்வே திட்டங்கள் உள்ளன. கிழக்கு திமோரில் இதுவரை ரெயில் வசதி உருவாக்கப்படவில்லை; அங்கு சாலைப் போக்குவரத்தே முக்கியமானதாக உள்ளது.