அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊடகம் ஒன்றுக்குப் பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசுபவர்களை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “இன்று எடப்பாடி பழனிசாமி மீது கண்டபடி குற்றச்சாட்டுகளைச் சொல்பவர்கள் வேறு யாரும் இல்லை; கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு பக்கபலமாகவும், ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள்தான். ஒருவேளை 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகியிருந்தால், இதே நபர்கள்தான் அவரை மாபெரும் ‘ராஜதந்திரி’ என்று தலையில் தூக்கி வைத்துப் புகழ்ந்திருப்பார்கள்” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய ராஜேந்திர பாலாஜி, “ஆனால், தேர்தலில் ஒரு மாயையின் காரணமாக விஜய் வெற்றி பெற்றுவிட்டதால், அன்று வரை எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பேசி வந்தவர்களே இன்று அவரை இகழ்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அன்றைக்கு இனிப்பாக இருந்த விஷயங்கள், இன்றைக்கு கசக்கத் தொடங்கிவிட்டன போலிருக்கிறது” எனத் தனது பாணியில் காரசாரமாக விமர்சித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அவருக்கு முழு ஆதரவாக நின்று ராஜேந்திர பாலாஜி அளித்துள்ள இந்த அதிரடிப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
