கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநர் சசிகுமார் இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிய இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. மதுரை பின்னணியில் உருவான இத்திரைப்படம், வெளியாகி 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாகம் (Sequel) எடுக்கும் மோகம் அதிகரித்து வரும் சூழலில், ‘சுப்ரமணியபுரம் 2’ உருவாக்கப்பட வேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. சோஷியல் மீடியாவிலும் இது குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுவது வழக்கம்.
சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம், ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சசிகுமார், ‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கும் எண்ணம் அல்லது திட்டம் எதுவும் தற்போது இல்லை எனத் தெளிவாக விளக்கமளித்து அந்தப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “படம் வெளியாகி 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்கள் இன்னமும் இத்திரைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், மரியாதையையும் இரண்டாம் பாகம் எடுத்து கெடுக்க நான் விரும்பவில்லை” என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்தார். சசிகுமாரின் இந்த ஓபன் டாக் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.
