உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நாய் இறந்த விவகாரம் தொடர்பாக இரு பக்கத்து வீட்டினரிடையே இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த விவாதம், சிறிது நேரத்திலேயே பெரும் சண்டையாக மாறியது.

இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவர் எதிர்தரப்பினரை மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டி, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும், “எனக்கு 7 கோடி ரூபாயில் வீடு இருக்கிறது; பணத்தை வீசினால் போலீஸையே விலைக்கு வாங்கிவிடுவேன்” என்று கூறி தனது பண பலத்தைக் காட்டி திமிராகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த தகராறில் அந்த இளைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் சேர்ந்து கொண்டு சண்டையிட்டனர். அதில் ஒரு பெண், இச்சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரை தடுத்து சண்டையிட்டார். இந்த தகராறைப் பார்க்க தெருவில் மக்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இணையத்தில் பரவும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உதவி ஆணையர் (ACP) சித்தார்த் கவுதம் தெரிவித்துள்ளார்.