மகாராஷ்டிரா மாநிலத்தில், நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து, வீட்டின் லாக்கரை உடைத்து ரூ.7.32 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதின் சாந்தாராம் கெய்க்வாட் (42). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருவதோடு, கடைகளில் இருந்து பணத்தைச் சேகரித்து அடுத்த நாள் வங்கியில் செலுத்தும் ‘ஏ.ஜி. டிரான்ஸ்போர்ட்’ என்ற பகுதி நேரத் தொழிலையும் செய்து வருகிறார். இதனால் இவரது குடும்பத்தினர் தினசரி பணப் பரிவர்த்தனைகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். வழக்கம்போல திங்கட்கிழமை இரவு நிதின் கெய்க்வாட், அவரது மனைவி அர்ச்சனா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத திருடர்கள், குடும்பத்தினர் மீது மயக்க மருந்தை வீசியுள்ளனர். இதனால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுள்ளனர். காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த நிதின், வீட்டின் அலமாரிகள் மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். , லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.6.50 லட்சம் ரொக்கப் பணம், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், விவோ, ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்ட ரூ.37,000 மதிப்புள்ள 8 கைபேசிகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி காசோலைப் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் திருடர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நிதின் கெய்க்வாட் அளித்த புகாரின் பேரில், போலீசார் அடையாளம் தெரியாத திருடர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட கைபேசிகளின் IMEI எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
