அரசுப் பணத்தில் அதாவது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பொதுத்துறை கட்டுமானங்கள் எந்த அளவிற்குத் தரமற்றுப் போகின்றன என்பதற்கு சான்றாக,  அதிர வைக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தாலுகாவில் ₹48 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ரவுண்ட் பில்லர்களை (குட்டித் தூண்கள்), ஒரு பத்திரிகையாளர் காலால் எட்டி உதைத்ததும் அவை உடைந்து விழுந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் அனைத்து பொதுத்திட்டங்களுக்கும் கடுமையான மற்றும் கட்டாயத் தரக் தணிக்கைகள் (Strict Quality Audits) 100% அவசியமா என்ற கேள்வியையும் பலமாக எழுப்பியுள்ளது. ​பொதுமக்கள் தங்களது உழைப்பில் பெரும் பகுதியை வரியாகச் செலுத்தும் நிலையில், அந்தப் பணத்தில் கட்டப்படும் பாலங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆனால், இந்த வங்கரஞ்சா-சின்ச்பூர் சாலையில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் தரம் குறித்து மக்கள் ஏற்கனவே அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பத்திரிகையாளர் துர்காதாஸ் லம்பே, பாலத்தின் பக்கவாட்டில் பாதுகாப்புக்காக வரிசையாகக் கட்டப்பட்டிருந்த அந்தச் சின்னச் சின்ன ரவுண்ட் பில்லர்களைக் காலால் எட்டி உதைத்து சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அந்தப் பில்லர்கள் அனைத்தும் வெறும் களிமண்ணால் செய்யப்பட்டது போல, ஒரு உதையிலேயே துண்டுகளாக உடைந்து கீழே விழுந்ததைப் பார்த்து ஊர்மக்களே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

​பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களின்போது ஒப்பந்ததாரர்களின் லாப வெறியினாலும், சில அதிகாரிகளின் கூட்டுச் சதியினாலும் தரம் குறைந்த சிமெண்ட் மற்றும் கம்பிகள் பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் என்று தற்காலிகமாக மழுப்பினாலும், வெறும் விசாரணை மட்டுமே இதற்குத் தீர்வாகாது.

கட்டட வேலைகள் தொடங்கும் ஆரம்பக் கட்டம் முதல் ஒவ்வொரு குட்டி பில்லர் கட்டப்படும் வரை முறையான மற்றும் வெளிப்படையான தணிக்கைகள் செய்யப்பட வேண்டும். தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட் செய்வதோடு, அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு, அவர்களிடம் இருந்தே அந்தப் பணத்தை அபராதமாக வசூலிக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.