பெப்சிகோ (PepsiCo) நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரியான (CEO) இந்திய வம்சாவளி இந்திரா நூயி, இந்தியாவைக் காரசாரமாக விமர்சித்தும், அமெரிக்கா மற்றும் சீனாவைப் பாராட்டியும் பேசியுள்ள கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களிலும் உலகத் தொழில் துறையினரிடையேயும் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இந்திரா நூயி, இந்தியாவை அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அமெரிக்கா என்பது திறமைகளுக்குச் சரியான வாய்ப்புகளை வழங்கும் ஒரு சிறந்த நாடு என்றும், சீனா தற்பொழுது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் அவர் பாராட்டினார்.
ஆனால், இந்திய கார்ப்பரேட் துறையின் பணிச் சூழலை கடுமையாகச் சாடிய அவர், “நான் இந்தியாவிலேயே தங்கி இருந்திருந்தால், இவ்வளவு பெரிய நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்திருக்க முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு நபரின் திறமை மற்றும் தகுதியை விட, மற்ற விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், அதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் ஒருவருடைய திறன் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Former PepsiCo CEO Indira Nooyi Statement On 🇮🇳Indian System
She Says “I could never have become CEO in any other country, including 🇮🇳India. It was only possible because 🇺🇸America rewards merit.” #India #Indian #IndianSystem #US #USA #IndiaUS #Pepsi #IndiraNooyi pic.twitter.com/dPQjHuYsm2
— Globe Wire 24 🌍 (@Globewire24) July 2, 2026
மேலும், இந்தியாவில் தரமான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் வாழவே முடியாது என்றும், இங்குள்ள அழகியல் என்பது மிகவும் சீரற்றதாகவும் குழப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது என்றும் இந்திரா நூயி குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்தியாவில் வாழ்வதை விட சீனாவில் ஒரு சுற்றுலாப் பயணியாக இருக்கவே தான் விரும்புவதாகக் கூறிய அவர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவது மிகவும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திரா நூயியின் இந்த சர்ச்சை பேச்சுக்குச் சமூக வலைத்தளங்களில் இந்திய நெட்டிசன்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதித்துக் காட்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய சாதனையாளர்களை உதாரணமாகக் காட்டி, நூயியின் பேச்சு இந்தியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைப்பதாக அவர்கள் சாடியுள்ளனர். அதே நேரத்தில், இந்திய கார்ப்பரேட் துறையில் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்களை அவர் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார் என்று ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருவதால், இந்த விவகாரம் இணையத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
