இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலான பயணிகள் பயணத்தின் போது வெளி இடங்களில் கிடைக்கும் பொருட்களின் தரத்தை நம்பாமல், குறிப்பாக குடிநீரை வாங்கும் போது புகழ்பெற்ற பிராண்டுகளையே தேர்வு செய்கின்றனர்.
ஆனால், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சந்திப்பு இரயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில், ‘எல்விஷ்’ என்ற பெயரில் போலி மற்றும் இரயில்வேயால் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இரயில் நிலையத்தில் பயணிகள் தரம் மற்றும் அங்கீகாரம் பெற்ற பொருட்களை மட்டுமே பெற உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி, அங்கிருந்த பயணி ஒருவர் கடை ஊழியரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஊழியர்கள் அதற்கு அலட்சியமாக பதிலளிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த மோசடி குறித்து கவலை தெரிவித்து, பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியோரை டேக் செய்து, பயணிகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த போலி பாட்டில் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள ‘இரயில்வே சேவா’ அமைப்பு, இந்த அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன், இதுகுறித்து உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற புகார்களை பயணிகள் உடனடியாக ‘இரயில்-மதத்’ செயலி மூலம் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
