அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் வரலாற்றுப் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அயர்லாந்து போன்ற அனுபவமில்லாத அணியிடம் எப்படித் தோற்கலாம் என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஏமாற்றம் நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆபித் அலி இந்திய ரசிகர்களின் புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய நாடு கிரிக்கெட் மைதானத்தில் தோற்பதைக் காண்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது” என நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த வன்மமான பதிவைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இப்படி இந்தியாவை வம்பிழுக்கும் ஆபித் அலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை வெறும் இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய அவர், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 1,180 ரன்களும், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 234 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார்.
இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் 37 சதங்களுடன் 15,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இந்திய அணி அயர்லாந்திடம் தோற்பதைக் கண்டு ஆபித் அலி மகிழ்ச்சியடைந்தாலும், அவர் தனது சொந்த அணியின் வரலாற்றை மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இந்திய அணி அயர்லாந்திடம் தனது கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாகத் தோற்றுள்ளது, ஆனால் பாகிஸ்தான் அணி கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே அயர்லாந்திடம் டி20 போட்டியில் அவமானகரமாகத் தோற்றதை நெட்டிசன்கள் அவருக்கு நினைவூட்டி வருகின்றனர்.
