தமிழக அரசியலில் சாதி, மதம் மற்றும் கட்சிகளைத் தாண்டி நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமே உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணமிருந்தால் மட்டுமே ஊராட்சி மன்றத் தலைவர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஆக முடியும் என்ற அவல நிலை தமிழகத்தில் நீடித்து வந்தது.

ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், ஐந்து பைசா கூட செலவு செய்யாமல் ஒரு கட்சி (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது மிகப்பெரிய வரலாற்று மாற்றமாகும். மக்கள் பணியைச் செம்மையாகச் செய்தாலே அவர்களின் பேராதரவை முழுமையாகப் பெற முடியும் என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள சூழலில், துரை வைகோவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், “நான் நல்லதொரு மாற்றம் என்று குறிப்பிடுவதால், தமிழக வெற்றிக் கழகத்தையோ அல்லது அதன் தலைவர் விஜய்யையோ சுயநலத்தோடு ஆதரிப்பதாக யாரும் கருத வேண்டாம். தேர்தலில் வாக்களிக்கும் போது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தவொரு கட்சிப் பாகுபாடும் பார்க்காமல், போட்டியிடும் வேட்பாளர்களில் நல்லவர்கள் யார் என்று ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் மக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றம் சாத்தியமாகும்; இந்த ஆரோக்கியமான மாற்றம் வரும் காலங்களிலும் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.