தொடர் விடுமுறையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அங்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அடுத்தடுத்து பக்தர்கள் மயங்கி விழுந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்ட நிலையில், பொது வழியிலும், 100 ரூபாய் சிறப்பு கட்டண வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாகக் கட்டண வரிசையில் நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து சுருண்டுள்ளனர். சாமி கும்பிட வந்த இடத்தில் உரியக் குடிநீர் வசதியோ, வெயில் படாமல் இருப்பதற்கான பந்தல் மற்றும் நிழற்குடை வசதிகளோ கூடக் கோவில் நிர்வாகம் முறையாகச் செய்து தரவில்லை என்று பாதிக்கப்பட்ட பொதுமக்களும் பக்தர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டணம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை பக்தர்களின் பாதுகாப்பில் காட்டவில்லை எனப் பழனி கோவில் நிர்வாகத்தின் மீது நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்தச் செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.
