வடமாநிலம் ஒன்றில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் விசித்திரமான விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சாலையில் மூன்று மாடுகள் ஒன்றுக்கொன்று வெறிபிடித்தது போல் பயங்கரமாக முட்டிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவை அங்கும் இங்கும் ஓடிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஒரு மாட்டின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தில் அந்த மாடு தூக்கி வீசப்பட்டு, அசைவற்று சாலையில் விழுந்தது. அது உயிரிழந்துவிட்டதா அல்லது மயக்க நிலையில் இருந்ததா என்று தெரியாத சூழலில்,
சற்றும் இரக்கமில்லாமல் அதனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த மற்றொரு மாடு, கீழே கிடந்த மாட்டை நோக்கி வந்து மீண்டும் மீண்டும் கொடூரமாக முட்டித் தள்ளியது. பேருந்து, லாரி என வாகனங்கள் வருவதைக் கூடப் பொருட்படுத்தாமல், அந்த மாடு காட்டிய கொலைவெறித் தாக்குதலைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மாடு ஏதேனும் தீவிர நோய்த்தொற்றால் (உதாரணமாக ரேபிஸ் போன்ற வெறிநோய்) பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால்தான் இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறது என்று சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், இந்தச் சம்பவம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் இதுபோன்று வளர்ப்புப் பிராணிகளையும், கால்நடைகளையும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக நடமாட விடுவது பொதுமக்களுக்குப் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். “இந்த விபத்தில் காரில் வந்தவருக்கு அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயம் ஏற்படாமல் கார் மட்டுமே சேதமடைந்துள்ளது. இதுவே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால், இந்நேரம் உயிரே போயிருக்கும்” என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுக உரிமையாளர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும், விபத்துகளைத் தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
