தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டும், துளியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் முதல்வர் செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் இதேபோன்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தினகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெறக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வருவதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் தனது அறிக்கையில் பதைபதைப்புடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகங்களில் சோதனை என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசங்களை அரசு ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவே, இன்று ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கு அவர்களுக்குத் துணிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி பகிரங்கமாக மிரட்டியதும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இணையாக தவெக மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைக்கப்பட்டதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, எதிர்க்கட்சிகளை முதல்வர் அலட்சியப்படுத்தி வரும் வேளையில், தவெகவினரின் இந்த அத்துமீறல்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.