நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான அணியில் 13 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே வீரர்களுக்குத் தண்ணீர் சுமக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது மும்பை டி20 லீக் தொடரில் தனது ஆல்-ரவுண்ட் திறமையால் எதிரணியை நிலைகுலையச் செய்துள்ளார். திங்கள்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், ‘ஏஆர்சிஎஸ் அந்தேரி’ அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தால், ‘பாந்த்ரா பிளாஸ்டர்ஸ்’ (Bandra Blasters) அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இப்போட்டியில் முதலில் பந்துவீச்சில் மிரட்டிய அர்ஜுன், 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் ரன் குவியலைத் தடுத்தார்.
After the six hit by Arjun Tendulkar struck a child sitting in the stands, Arjun met the child after the match and gifted him that same ball with his autograph on it.🙌❤️
Arjun has a big heart, just like his father. ❤️ pic.twitter.com/KynnWyDAtE
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 8, 2026
இதனைத் தொடர்ந்து, கேப்டன் சிவம் துபேவின் நம்பிக்கையோடு 3-வது வீரராகக் களம் இறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு, 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த அதிரடி ஆட்டத்தின் போது, அர்ஜுன் அடித்த ஒரு சிக்ஸர் பந்து கேலரியில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இதனை கவனித்த அர்ஜுன், போட்டி முடிந்தவுடன் உடனடியாக அந்தச் சிறுவனைத் தேடிக் கண்டுபிடித்து நேரில் சந்தித்தார்.
அச்சிறுவனின் உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அர்ஜுன், அவனது தலையில் பட்டுப் பின் கையில் விழுந்த அதே பந்தில் தனது ஆட்டோகிராஃப் இட்டுப் பரிசாக வழங்கினார். ஐபிஎல் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், உள்ளூர் போட்டியில் விஸ்வரூபம் எடுத்ததோடு, சிறுவனின் மனம் குளிரும் படி அர்ஜுன் டெண்டுல்கர் நடந்துகொண்ட விதம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
