தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சமீபத்தில் திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு எதிராக நடிகை வினோதினி வைத்தியநாதன் தற்போது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், முதலமைச்சர் விஜய்யின் பேச்சு சில இடங்களில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும், வாயில் நல்லா வருது என்று அவர் பேசியதெல்லாம் அவர் வீற்றிருக்கும் முதலமைச்சர் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளதாகவும் வினோதினி சாடியுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு என்றால் விஜய், விஜய் தான் தமிழ்நாடு” என்பதையெல்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உங்களை விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாகாது என்றும் வினோதினி காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் பாஜக எப்படி மதத்தைப் பயன்படுத்திப் பிரிவினைவாத அரசியல் செய்கிறதோ, அதேபோலத் தற்போதைய தவெக அரசும் தூய சக்தி, தீய சக்தி என மக்களைப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வினோதினி, விஜய் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர், அவ்வளவே தவிர அவரே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி கிடையாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.