தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களுக்கு உதவியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது ஜாதி, மதம், சொந்த பந்தம் போன்ற எந்தப் பாசமும் பார்க்கக் கூடாது என்றும், தகுதி மட்டுமே ஒரே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அக்மார்க் ‘நோ காம்ப்ரமைஸ்’ பாணியில் கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாகத் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே சிவப்புக் கம்பளம் விரிக்கும் பழைய ஃபார்முலாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்தத் திடீர் கண்டிப்பு, தங்களது ஆட்களின் பட்டியலோடு காத்திருந்த சில அமைச்சர்களுக்குப் பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மறுபுறம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர் நிர்வாகத்திற்குப் புதியவர்கள் என்பதால், ஆட்சித் தொடக்கத்திலேயே தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் முதல்வர் தீவிரமாக இருக்கிறார்.
இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ரகசியத் தகவலில், அமைச்சர்களின் அனுபவக் குறைவைச் சரிசெய்யும் பொறுப்பு அதிகாரிகளுடையது என்றும், அமைச்சர்களை எதிர்பாராமல் துறைகளின் அன்றாடச் செயல்பாடுகளையும் முக்கியத் திட்டங்களையும் அதிகாரிகளே முன்னின்று நடத்த வேண்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் தூய்மை அமைச்சர்களின் அறையிலிருந்தே தொடங்க வேண்டும் என்கிற முதல்வரின் இந்த அதிரடி ஆக்ஷன், கோட்டை வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
