கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது மகளின் இறுதிச்சடங்கு தனக்குத் தெரியாமல் அவசர அவசரமாக நடத்தப்பட்டு விட்டதாக சிறுமியின் தாய் அளித்துள்ள பேட்டி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூளூர் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமி திடீரென மாயமான நிலையில், அங்குள்ள குளம் ஒன்றில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இரண்டு நபர்களே, அச்சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்து குளத்தில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அந்த இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொடூர சம்பவத்திற்குப் பின், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், சிறுமியின் தாய் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, “பிரேத பரிசோதனைக்குப் பிறகு என் பெற்ற மகளின் உடலை என் கண்ணில் கூட காட்டவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றுள்ளார். எங்கள் சொந்த ஊரான சேலத்திற்கு நான் போய்ச் சேருவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக என் குழந்தையின் உடலை எரியூட்டி (தகனம்) விட்டனர். எங்களுக்கு நியாயமான நீதி வேண்டும் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகளின் உடலை வாங்குவதற்காக மருத்துவமனையில் வழங்கப்பட்ட படிவங்களில் தான் எந்தக் கையெழுத்தும் இடவில்லை என்றும், தனக்குத் தெரியாமலேயே அனைத்தும் நடந்து முடிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் சூளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இக்கொலை வழக்கு மற்றும் இறுதிச்சடங்கு விவகாரம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்
