அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே, 21 வயது வாலிபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த அந்த வாலிபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில், வெள்ளை மாளிகைக்கு மிக அருகாமையில் உள்ள இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது வெள்ளை மாளிகையின் முதன்மைப் பாதுகாப்பு சோதனைச் சாவடி பகுதியாகும்.

அதிபர் பாதுகாப்புப் படையான ‘சீக்ரெட் சர்வீஸ்’ அதிகாரிகள் அங்குப் பணியில் இருந்தபோது, வந்த ஒரு வாலிபர் திடீரெனத் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினார். அவர் சுமார் 20 முதல் 30 ரவுண்டுகள் வரை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிப் பதில் தாக்குதலில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த வழியே சென்ற பாதசாரி ஒருவரும் காயமடைந்தார்.

போலீஸ் விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் 21 வயதான நசீர் பெஸ்ட் என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லப்பட்ட நசீர் பெஸ்ட் ஏற்கனவே அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கடந்த 2025 ஜூன் 26 அன்று பாதுகாப்பு முகவர்களை மிரட்டியதாகவும், ஜூலை 10 அன்று தடை செய்யப்பட்ட வெள்ளை மாளிகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நீதிமன்றம் இவரை வெள்ளை மாளிகை பகுதிக்கு வரக்கூடாது எனத் தடை விதித்திருந்ததும் தெரியவந்துள்ளது.

நியூயார்க் போஸ்ட் ஊடகத்தின்படி, நசீர் பெஸ்ட் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், தன்னை ‘இயேசு ‘ என அவர் நினைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் பீதியடைந்தனர். அப்போது வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த ஏபிசி நியூஸ் செய்தியாளர் செலினா வாங் கூறுகையில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், நாங்கள் பயந்துபோய் செய்தி மாநாட்டு அறைக்குள்  தஞ்சமடைந்தோம் என்றார். கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், “ஆரம்பத்தில் 20 முதல் 25 பட்டாசுகள் வெடிப்பது போல் இருந்தது, பின்னரே அது துப்பாக்கிச் சூடு எனத் தெரிந்து அதிர்ந்தோம்” எனக் கூறினார். இச்சம்பவத்தால் வெள்ளை மாளிகை பகுதியில் பாதுகாப்பு உச்சகட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.