ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று அனல் பறக்க அரங்கேறியது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராகக் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 156 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கித் துரத்தியது.

தொடக்கத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தாலும், ஒன்-டவுன் பேட்ஸ்மேனாகக் களம் புகுந்த சஞ்சு சாம்சன் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

வெறும் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 மெகா சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்து மாஸ் காட்டினார். 19 வயது இளம் புயல் கார்த்திக் சர்மா (41 ரன்கள்) மறுமுனையில் இவருக்குச் செம கம்பெனி கொடுத்தார்.

சென்னை ரசிகர்களின் புதிய செல்லப்பிள்ளையாக மாறியுள்ள சஞ்சு சாம்சன், போட்டி முடிந்ததும் செய்தியாளர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் தனது ஸ்டைலில் பதிலளித்தார். தனது சதம் நழுவியது குறித்துப் பேசிய அவர், “சதம் அடிப்பதற்காக நான் கொஞ்சம் சுயநலமாக யோசித்திருக்கலாம்.

ஆனால், எனக்காக விளையாடுவதை விட அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதே எனது லட்சியம். ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதுதான் எனக்கு எல்லையற்ற திருப்தியைத் தருகிறது” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

மேலும், “ரசிகர்கள் அன்போடு என்னை ‘சேட்டா’ (அண்ணன்) என்று அழைக்கிறார்கள், ஆனால் எனக்கு ‘சஞ்சு’ என்று கூப்பிடுவதே ரொம்ப பிடிக்கும். நான் எப்போதும் களத்திற்கு வெளியேயும் அமைதியான ஆளுமைதான். இப்போது நீங்கள் என்னை மைதானத்தில் உற்று நோக்குவதால் நான் அமைதியாக இருப்பதை உணர்கிறீர்கள்” எனத் தனது எதார்த்தமான குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.