தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து, தலைவர்கள் பலரும் ஓய்வெடுக்கச் சென்றுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கோவையில் விசிகவினர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது, “குழந்தைகள் சாக்லேட்டிற்கு அடம் பிடிப்பதைப் போல, பெற்றோர்களிடம் அடம் பிடித்து தவெக-விற்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்” என விஜய் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட பல குழந்தைகள், வீட்டில் சாப்பிடாமல் அடம் பிடித்தும், பெற்றோர்களை வற்புறுத்தியும் தவெக-விற்கு வாக்களிக்கச் சொன்னதால் பல குடும்பங்களில் மனக்கசப்பும், பெற்றோர்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகக் கோவையைச் சேர்ந்த விசிக நிர்வாகி ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

விஜய்யின் இந்தச் செயல் குழந்தைகளின் பிஞ்சு மனதில் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் அறிக்கையில் “குட்டி நண்பா மற்றும் நண்பீஸ்களுக்கு விஜய் மாமாவின் நன்றிகள்” என அவர் குறிப்பிட்டிருந்ததும், தேர்தல் பிரச்சாரத்தில் புறா மீது கட்சி வண்ணம் பூசியதற்காக பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் விஜய் மீதான சர்ச்சைகள் ஓயாமல் தொடர்வது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறை விஜய் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.