மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சுயநலத்திற்காக மட்டுமே செயல்படுவதாகவும், அவர் தனது கட்சிக்கே விசுவாசம் இல்லாதவர் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாகச் சாடியுள்ளார். கமல்ஹாசன் தனக்கென ஒரு ராஜ்யசபா சீட்டை மட்டும் வாங்கிக்கொண்டு, கடந்த 9 ஆண்டுகளாக கட்சிக்காகப் பாடுபட்ட தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சித் தொண்டர்களையே காப்பாற்றத் தெரியாத ஒரு நபர், எப்படித் தமிழக மக்களைக் காப்பாற்றுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவைத் தான் வானதி சீனிவாசன் தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். தொண்டர்களை ‘அம்போ’ என விட்டுவிட்டு, தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் கமல்ஹாசன் காய் நகர்த்துவதாக அவர் கூறியுள்ள இந்தப் பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
