இந்திய இரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்த பொதுப் பெட்டிகளில் இருக்கைக்காகப் பயணிகள் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவின் தொடக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கை தொடர்பாக கடும் வாக்குவாதம் நிலவுகிறது. அந்தப் பெண் கையில் செருப்பை வைத்துக் கொண்டு அந்த நபரை மிரட்டுவதும், ஆக்ரோஷமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், வாக்குவாதத்தில் சம்பந்தப்படாத அந்த நபரின் மனைவியைக் குறிவைத்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

 

தன்னையும் தனது குடும்பத்தையும் அநாகரீகமாகப் பேசியதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த நபர், ஆவேசத்துடன் பாய்ந்து வந்து அந்தப் பெண்ணின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். அருகில் இருந்தவர்கள் தடுத்தும் அந்த நபர் தொடர்ந்து அந்தப் பெண்ணைத் தாக்கினார். இறுதியில் அவரது மனைவியே தலையிட்டு அவரை அமைதிப்படுத்த வேண்டிய சூழல் உருவானது. அங்கிருந்த மற்ற பயணிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டனர்.

‘@gharkekalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் கூறுகையில், “அந்தப் பெண் செருப்பைக் காட்டி மிரட்டியதும், எல்லையைத் தாண்டி குடும்பத்தாரைத் திட்டியதுமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம்” என அந்த நபருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இருதரப்பிலும் நிதானம் தவறியது தவறு; பொது இடத்தில் இதுபோன்ற வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.