ஒடிசா மாநிலம் பலங்கீர் மாவட்டத்தில், திருமணம் முடிந்து புதுமணத் தம்பதி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மணமகளை முன்னாள் காதலன் உள்ளிட்ட மூவர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன், திருமணம் முடிந்து தனது மனைவியுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனத்தை வழிமறித்த கும்பல், மணமகனைத் துப்பாக்கியால் மிரட்டிவிட்டு, மணமகளை வலுக்கட்டாயமாக மற்றொரு வாகனத்தில் ஏற்றிச் சென்றது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மணமகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணை மீட்கவும் தலைமறைவான முன்னாள் காதலன் உள்ளிட்ட குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்படைகள் அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருமணமான சில மணி நேரங்களிலேயே மணமகள் கடத்தப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
