ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது இரண்டாவது கணவரை (கள்ளக்காதலன்) கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது மங்களகிரி பகுதியைச் சேர்ந்த கிராந்தி (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் தனியாக வசித்து வந்த நிலையில், கிராந்தியின் வீட்டில் பழுதாகி இருந்த ஏசியைச் சரி செய்வதற்காக ஷேக் அகமத் (27) என்ற மெக்கானிக் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தனது காதலைத் தொடர விரும்பிய கிராந்தி, முதல் கணவரைச் சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு வெளியே வந்தார். ஷேக் அகமத் மற்றும் கிராந்தி வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், கிராந்தி ஏற்கனவே திருமணமானவர் என்பதாலும் அகமதின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தகராறு வெடித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அகமதிற்கும் கிராந்திக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கிராந்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அகமதைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
அகமதின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குத் துடித்துக்கொண்டிருந்த ஷேக் அகமதை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அகமத் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கிராந்தியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
