16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, சுமார் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ‘பறக்கும் முத்தம்’ கொடுப்பது போன்ற செயல்கள் வெளிப்புறத் தோற்றத்திற்கு சாதாரணமான ஒன்றாகத் தெரிந்தாலும், அது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையிலான பாலியல் ரீதியான சீண்டலே என்று கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டது தண்டனைக்குரிய குற்றம் என உறுதி செய்த நீதிபதி, அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த நீண்ட கால விசாரணையின் முடிவில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தற்போது திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தீர்ப்பு பொது இடங்களில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், சட்டத்தின் பார்வையில் இத்தகைய செயல்கள் கடுமையானவை என்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
