விஜய் நடிப்பில் வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், இதற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
நடிகர் விஜய்யை தங்களது கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியாகவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை வாரியம் மூலம் படத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பாஜக நிர்வாகி குஷ்பூ கூறுகையில், விஜய் ஒரு பெரிய நடிகர் என்பதால் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் வருவது இயல்புதான் என்றும், ஆனால் அந்தக் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் இன்னும் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
