தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவியின் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருந்த வெங்கட்ராமன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை குறைவு காரணமாக, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் தற்போது 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். பத்து நாட்களுக்கும் மேலான தொடர் விடுப்பு என்பதால், ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியாகப் பணியாற்றி வரும் அபய்குமார் சிங்குக்கு கூடுதல் பொறுப்பாகப் பொறுப்பு டிஜிபிக்கான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அபய்குமார் சிங் இந்தப் பணிகளை கூடுதலாகக் கவனிப்பார் என்றும், வெங்கட்ராமன் விடுமுறை முடிந்து திரும்பும்போது பணிகள் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.