கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த ஐந்தாவது நாளே, அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி, பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி அனுப்பிய விவரம் தற்போது விசாரணையில் வெளியாகி உள்ளது.

அந்தச் செய்தியில், இந்த பலாத்கார சம்பவத்தில் தவறு செய்யாத நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று திலீப் தெரிவித்திருந்ததாக, போலீஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார் கைது செய்யப்பட்ட உடனேயே தான், தன்னை போலீஸ் நெருங்கும் என்ற பயத்தில் திலீப் இந்த செய்தியை அனுப்பி இருக்கலாம் என்றும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சதித்திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் எனக் கண்டறியப்பட்ட பல்சர் சுனில்குமார் உள்பட அந்தக் கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் சதித் திட்டம் தீட்டியது நடிகர் திலீப் எனத் தெரியவந்ததையடுத்து, சம்பவம் நடந்து 5 மாதங்களுக்குப் பிறகு திலீப் கைது செய்யப்பட்டு 85 நாள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஏழு வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளதால், வரும் டிசம்பர் 8ஆம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் திலீப், முதலமைச்சர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிய தகவல்கள் வெளியாகி இருப்பது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.