கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாகப் பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பிய நிலையிலும், மீண்டும் நேற்று முன்தினம் (நேற்று) 12-ஆம் வகுப்பு மாணவனை, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த அந்த 12-ஆம் வகுப்பு மாணவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய 15 மாணவர்களைப் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களைக் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். மோதலில் மாணவனின் உயிர் பலியானதால், அவரது உறவினர்கள் கண்ணீர் மல்கி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது.