கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் பலெஹொன்னூரைச் சேர்ந்த அசோக் (23) என்ற பி.காம். பட்டதாரி இளைஞர், 2023ஆம் ஆண்டு மாதம் ரூ.80,000 முதல் 1,00,000 வரை சம்பளம் தரும் ஒரு ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ வேலைக்காகக் கம்போடியாவுக்குச் சென்றார். அவரை அவரது அண்டை கிராமத்தைச் சேர்ந்த நிக்ஷேப் என்பவரே இந்த வேலைக்காகப் பேங்காக் வழியாக கம்போடியாவுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அங்கு சென்றதும் அசோக்கின் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் ஒரு சைபர் மோசடிக் கும்பலின் பிடியில் சிக்கினார். அவர் வேலைக்குச் சேருவதாகக் கூறிப் போனது, உண்மையில் “ஒரு சிறைச்சாலை தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அசோக் இந்தச் சைபர் மோசடிக்கு உடன்பட மறுத்தபோது, “ரூ.13 லட்சம் பணத்தைக் கொடு அல்லது காலவரையின்றி பிணைக் கைதியாக இரு” என்று அவரது மேலாளர் மிரட்டியுள்ளார்.
அங்கு இருந்த இந்தியர்களுக்கு எதிராகவே போலியான டேட்டிங் சுயவிவரங்களை உருவாக்கி, அவர்களை கிரிப்டோ மற்றும் அந்நிய செலாவணி மோசடி போர்ட்டல்களில் முதலீடு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், எதிர்ப்பவர்களுக்கு அறைக்குள் அடைத்து, இரும்புக் கம்பியால் அடித்து, குறைந்த மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும் அசோக் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுத் தப்பிக்க வழியில்லாமல் இருந்த அசோக்கிற்கு, அவரது பக்கத்து வீட்டுக்காரரான மஞ்சுநாத் ரவி மற்றும் நரசிம்மராஜபுரா காவல் நிலைய துணை ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஸ்ரீகுரு சஜ்ஜன் ஆகியோர் இணைந்து செயல்பட்டதே வரப்பிரசாதமாக அமைந்தது. தன்னை விடுவிக்க ரூ.13 லட்சம் கேட்டு குடும்பத்திற்கு மேற்பார்வையின் கீழ் இரண்டு முறை அழைத்தபோது, அசோக் தனது அண்டை வீட்டார் மஞ்சுநாத் ரவியைத் தொடர்பு கொண்டார்.
ரவி, இந்த விஷயத்தைக் காவல்துறையிடம் கொண்டு செல்ல, எஸ்.ஐ. சஜ்ஜன் ஒரு துணிச்சலான திட்டத்தை வகுத்தார். அசோக்கை ஆள் கடத்தல் செய்ததாக நிக்ஷேப் மீது வழக்குப் பதிவு செய்து, அவருடைய பெற்றோரைக் கைது செய்யப் போவதாக மிரட்டி, நிக்ஷேப்பை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். ஒருகட்டத்தில், இந்த மிரட்டல்களால் பயந்த நிக்ஷேப், அசோக் மீது போலியாக ஒரு கைபேசி திருட்டு வழக்குப் பதிவு செய்து, அவரைக் கம்போடிய காவல்துறையின் மூலம் வெளியே கொண்டு வரச் செய்தார்.
அதன்பிறகு, இந்தியத் தூதரகம் மூலம் அசோக் மீட்கப்பட்டு, நவம்பர் 2023இல் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பினார். தூதரக அதிகாரிகள் அசோக்கைக் கைப்பைகளை விட்டுவிட்டு நேராகப் பேங்காக் சென்று இந்தியா திரும்ப அறிவுறுத்த, அவர் விட்டுச் சென்ற பையில் போதைப்பொருளை வைத்துள்ளனர் என்பது அவருக்குப் பின்னர் தெரியவந்தது. சரியான நேரத்தில் கிடைத்த உதவி காரணமாக அசோக் பெரிய ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
தற்போது அசோக் தனது சொந்த ஊரிலேயே வேலை செய்து வருகிறார். இந்த மீட்புச் செயல், ராஜதந்திர முயற்சிகளுடன் உள்ளூர் போலீஸின் மிரட்டல் யுக்தி மூலமாகச் சாத்தியமானது என எஸ்.ஐ. சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.
