ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரில், 57 வயதான முகமது ஷாஃபி பரே என்ற தையல்காரரும் ஒருவர். அரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அதிக வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்தெடுக்கும் பணியில் காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
வெடிபொருட்களைத் தனித்தனிப் பைகளில் தைப்பதற்காகவே ஷாஃபி பரே-வை காவல்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரவு 9 மணிக்கு இரவு உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது, அதிகக் குளிர் காரணமாக அவரது மகள் “வேண்டாம், போகாதே” என்று கெஞ்சியும், வேலையை முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, “வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வருவேன்” என்று கூறிச் சென்றதே அவரது கடைசி வார்த்தைகள் என்று உறவினர் முகமது ஷாஃபி ஷேக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல் நிலையத்திற்கு விரைந்த உறவினர்கள், காவல் நிலையம் முற்றிலும் இடிபாடுகளால் சூழப்பட்டு, சடலங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பல மணி நேரம் தேடிய பின்னர், மருத்துவமனையின் ஒரு மூலையில் அவரது உடலை மீட்டுள்ளனர்.
பரேவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் மட்டுமே குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி வந்த நிலையில், காவல்துறைக்குப் பணி செய்ய வந்தவருக்கு எந்த உதவியை அரசு செய்யும் என்று அவரது உறவினர் தாரிக் அகமது ஷா கேள்வியெழுப்பினார்.
மறைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோபம் மற்றும் துயரத்துடன், தங்கள் கதி மற்ற யாருக்கும் ஏற்படக் கூடாது என்று கோரி, இந்தக் காவல் நிலையத்தை வாழும் பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தச் சதித்திட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “இதற்குப் பின்னால் பெரிய தலைகள் உள்ளன. பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படும் வரை எதுவும் மாறாது,” என்று அவர்கள் நீதிக்காகக் குரல் எழுப்பியுள்ளனர்.
