புதுடெல்லி: கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பின் கோரமான காட்சிகளை நேரில் கண்ட சாட்சி ஒருவர், இரவு முழுவதும் அச்சத்தில் நடுங்கிக் கிடந்தார்.

டெல்லி சீலம்பூரைச் சேர்ந்த மனோகர் (40) என்பவர், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சான்ட்னி சௌக்கில் உள்ள கௌரி சங்கர் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அன்றைய தினம் அவர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், சில நிமிட தாமதம் அவரது உயிரைக் காப்பாற்றியது.

இல்லையெனில், 9 பேரின் உயிரைப் பலிகொண்ட அந்த பயங்கரவாத தாக்குதலில் இவரும் பலியாகியிருக்கலாம். “அந்த நீண்ட வரிசைதான் என் உயிரைக் காத்த கேடயம்” என்று அவர் கூறியுள்ளார்.

மனோகர் கோவிலின் படிகளில் இருந்து கீழே இறங்கியபோது, காதைப் பிளக்கும் வகையில் பலத்த சத்தம் கேட்டதுடன், கண் இமைக்கும் நேரத்தில் சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. அப்போது ஓட்டம், அழுகை, அலறல் சத்தங்கள் மட்டுமே கேட்டன.

புகை விலகியபோது, தனது மோட்டார் சைக்கிளின் டயருக்கு அருகில் மனித மாம்சத்தின் ஒரு பகுதியைப் பார்த்ததாகக் கூறிய மனோகர், இதனால் உறைந்துபோனதாகவும் தெரிவித்தார். குண்டுவெடிப்பால் அருகில் இருந்த ஜெயின் கோவிலின் கண்ணாடிகள் உடைந்ததாகவும், பயங்கரவாத தாக்குதலின் அச்சத்தில் தான் நடுங்கிக் கொண்டே அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் விவரித்துள்ளார். இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.