கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாகமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியின் குளியலறையில் மறைந்த கேமரா கண்டறியப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 11 மாடிக் கட்டிடம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 6,000க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்குத் தங்குமிடத்தை வழங்குகிறது. விடுதியின் குளியலறையில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் திரண்டு வந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், இந்தக் கேமராவை நிறுவிய விடுதி ஊழியரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது நீலுகுமாரி குப்தா மற்றும் அவரது பெங்களூருவைச் சேர்ந்த நண்பர் சந்தோஷ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி எஸ்.பி. பி. தங்கதுரை வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 2ஆம் தேதி நீலுகுமாரி குப்தா தங்கியிருந்த அதே விடுதியின் வட மாநிலப் பெண்கள் தங்கியிருந்த அறையின் குளியலறையில் அவரது ஆண் நண்பர் சந்தோஷின் தூண்டுதலின் பேரில் இந்தக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தோஷ், நவம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து உதானப்பள்ளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்து, நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்களின் பெற்றோர்கள் விடுதி முன்பு திரண்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து, பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஓசூர் கூடுதல் ஆட்சியர் ஆக்ரிதி சேதி மற்றும் எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதுகாப்புக்கு உறுதியளித்தனர்.
மேலும், விடுதி வளாகத்தில் வேறு எங்கும் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்த, தற்போது பெண் காவலர்கள் அந்த இடத்தை ஆராய்ந்து தீவிரச் சோதனை நடத்தி வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
