உத்தரப் பிரதேசத்தின் மௌ நகரில் உள்ள ஷீத்லா மாதா கோயில் அருகே பரபரப்பான சாலையில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. சைக்கிளில் சென்ற பெண் ஒருவர், எதிரே வேகமாக வந்த இரு பைக்கர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் பிரேக் போடுவார்கள் என நினைத்து திடீரென சாலையை கடக்க முயன்றார்.

ஆனால் அந்த பைக்கர்கள் வேகத்தைக் குறைக்காமல் நேராக மோதினர். சைக்கிளும் பெண்ணும் தரையில் சரிந்தனர். அருகில் நின்ற லாரி சிசிடிவி காட்சியை மறைத்தாலும், மோதிய வேகத்தில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதிய பைக்கர்கள் பெண்ணின் நிலையைப் பார்க்காமல், உதவி செய்யாமல் உடனடியாக தப்பி ஓடிவிட்டனர். இது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியின் இறுதியில் இரு பயணிகள் பெண்ணிடம் சென்று உதவ முயன்றது தெரிகிறது. ஆனால் பெண் மருத்துவமனைக்கு சென்றாரா என்பது தெரியவில்லை.

இந்த விபத்து யாருடைய தவறு என சர்ச்சை எழுந்துள்ளது. சைக்கிள் பெண் பாதுகாப்பாக சாலையைக் கடக்காமல் போனதாகவும், பைக்கர்கள் வேகத்தைக் குறைக்காமல் அலட்சியமாக சென்றதாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சைக்கிள் பாதை, நடைபாதை இல்லாதது, போக்குவரத்து விதிகளை மதிக்காதது போன்ற பிரச்னைகளையும் இது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.