தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இன்று பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் புகழ் பெற்ற தலைவராக திகழ்கிறார்.
அவரை யாராவது ‘மிஸ்டர் பி.எம்.’ என்று கூப்பிட்டால் யாரும் ரசிக்க மாட்டார்கள். அவர் மாஸ்டர் பி.எம்., உலக நாடுகள் விரும்பும் தலைவராக இருக்கிறார். விஜய் அரசியலில் புதியவர். அவர் வருவதால் எங்களுக்கு எந்த தாக்கமும் இல்லை.
பா.ஜனதா இப்போது பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. 2026 தேர்தலில் ஆளுங்கட்சிக்கு போட்டியாக நிற்கப் போவது பா.ஜனதா கூட்டணிதான். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது. அதை விஜய் தான் கண்டு ஆச்சரியப்பட வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் அவர், “விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர் ‘மிஸ்டர் பி.எம்.’ என்று எழுதி வைத்திருக்கிறார். அதை அவர் படித்தார். பா.ஜனதா கூட்டணி பொருந்தும் கூட்டணியா, பொருந்தாத கூட்டணியா என்பதை அவருக்கு என்ன தெரியும். கச்சத்தீவை பற்றி பேசியதே அவருக்கு அரசியல் அறிவு இல்லையென்பதற்குச் சான்று. ஒரு மாநாட்டில் கொடியை ஒழுங்காக நடக்க முடியவில்லை, ஒரு மாநாட்டை நடத்த முடியாதவர்கள் ஆட்சியை எப்படி நடத்துவார்கள்” என விஜயை கடுமையாக விமர்சித்தார்.
