அரணி, செய்யாறு பகுதிகளில் எழுச்சிப் பயணத்தில் கலந்து கொண்டு வந்தவாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் கூட்டத்தைச் சந்தித்தார். அப்போது அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என மக்கள் எழுச்சியே சாட்சியமாக உள்ளது என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கிறார் ஆனால் அதிமுக மக்களை நம்புகிறது எனவும், திமுக ஆட்சி எந்த திட்டமும் தராமல் ஊழல் மட்டுமே செய்கிறது எனவும் குற்றம்சாட்டினார். திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், “நான் முதல்வராக இருந்த காலத்தில் விலைவாசி உயர்வே இல்லை. வறட்சி, புயல், கொரோனா வந்தபோதும் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்தோம். ஆனால் திமுக ஆட்சியில் மளிகை, கட்டுமானப் பொருட்கள் எல்லாம் விலையேற்றம் அடைந்துவிட்டது. மின் கட்டணம் 67% உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் கமிஷன் வாங்கும் திமுக அரசுக்கு மக்களின் துயரம் தெரியவில்லை. டாஸ்மாக்கில் மட்டும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது” என பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு ஆல் பாஸ், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், பெண்களுக்கு தீபாவளிச் சேலை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர் காப்பீடு, தடுப்பணை, குடிமராமத்து என பல நலத்திட்டங்கள் வழங்கியதை நினைவுபடுத்தினார். திமுக அரசு பள்ளிகளை மூடி கல்வியை பாழாக்கிவிட்டதாகவும், அதிமுக மட்டுமே மக்கள் செல்வாக்குள்ள கட்சியாக இருந்து வருவதாகவும், “ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்… விரைவில் அதிமுக மீண்டும் ஆட்சியமைத்து தமிழகத்தை மீட்கும்” என எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்தினார்.
