பெங்களூரு உலகளவில் தொழில்நுட்ப மையமாக வளர்ந்துள்ளது. ஹோட்டல்களில் உணவு பரிமாறும் பணியிலும், வீடுகளை சுத்தம் செய்யும் பணியிலும் ரோபோக்கள் பயன்படுகின்றன.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் இன்ஜினீயர் சமையல் வேலையை எளிதாக்கும் வகையில் தோசை சுடும் ரோபோவை உருவாக்கியுள்ளார். ‘திண்டி’ என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, அடுப்பில் தோசைக்கல் வைத்தால் போதும், தானாகவே மாவை ஊற்றி, சுட்டு தயார் செய்து விடும். குடும்பத்தில் தோசை சுட சிரமம் இருப்பதை கவனித்ததால் தான் இதை வடிவமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி அவர் ரெடிட் இணையதளத்தில் பகிர்ந்ததும், பல இணையவாசிகள் அவரை பாராட்டினர். “இந்த தோசை கிரிக்கெட் ஸ்டேடியம் போல இருக்கிறது” என்று சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர். மற்றவர்கள், “உங்கள் உழைப்பு தெரிகிறது, இன்னும் சிறந்த கண்டுபிடிப்புகளை செய்ய வாழ்த்துகள்” என்று உற்சாகப்படுத்தினர். தற்போது, குழந்தைகள் “இது அம்மா சுட்ட தோசை, அப்பா சுட்ட தோசை” எனச் சொல்வதற்கு பதிலாக, “இது ரோபோ சுட்ட தோசை” எனச் சொல்லும் நிலை வந்துவிட்டது என நகைச்சுவையாக மக்கள் பேசிக்கொண்டு வருகின்றனர்.
