ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் மனிதாபிமானம் கேள்விக்குறியாக்கும் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜலந்தர் பாலியர் சிங் என்பவருக்கும், அவரது மனைவி சுபத்ரா மல்பிசோவுக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக, சுபத்ரா தன் தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். ஒரு வருடமாகியும் மனைவி வீடு திரும்பாததால், பாலியர் சிங் சமீபத்தில் மாமியார் வீட்டிற்கு சென்று சுபத்ராவை அழைத்து வர முயன்றார். ஆனால் அங்கு ஏற்பட்ட சூழல் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளியது.

மனைவி வராததை காரணமாகக் கொண்டு கோபமாக இருந்த மாமியார், பாலியர் சிங்கை நேரடியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட சுபத்ராவின் உறவினர்கள் திரண்டு வந்து, ஒருவரின் பின் ஒருவராக அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், அருகிலிருந்த மின்கம்பத்தில் அவரை கட்டியபடி விடிய விடிய அடித்துள்ளனர். இந்தக் காட்சிகள் கிராம மக்களால் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளார். ஆனால் யாரும் மீட்க முயற்சிக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலியர் சிங்கை மீட்டனர். அவர் கடுமையாக காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சுபத்ரா, அவரது தாயார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாலியர் சிங்கை மின்கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், இது சினிமா காட்சியை மிஞ்சும் கொடூரமான சம்பவமாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
