மும்பையில் 83 வயது மூதாட்டி ஒருவர் ‘டிஜிட்டல் கைது’ என்ற புதிய மோசடி முறையில் சிக்கி, ரூ.7.70 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலபா பகுதியில் தனியாக வசிக்கும் இந்த மூதாட்டி, பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது இரு மகள்களும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கடந்த மாதம் 4-ம் தேதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஊழியர் எனக் கூறிய ஒருவர், மூதாட்டியை செல்போனில் தொடர்பு கொண்டு, இவரது வங்கிக் கணக்கில் இருந்து ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் மிரட்டினார். பின்னர், இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
அதன்பின், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் போலீஸ் சீருடை அணிந்த நபர், மூதாட்டியை ‘டிஜிட்டல் கைது’ செய்ததாகவும், ஆன்லைன் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இவரையும், இவரது பிள்ளைகளையும் கைது செய்வோம் என பயமுறுத்தினார். பயத்தில் உறைந்த மூதாட்டி, மோசடி கும்பல் கேட்ட வங்கி இருப்பு, முதலீடு விவரங்களை அளித்தார்.
பின்னர், அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.7.70 கோடி வரை ஆன்லைனில் அனுப்பினார். பணத்தை அபகரித்த கும்பல், பின்னர் தொடர்பை துண்டித்தது. சம்பவம் குறித்து மகளிடம் தெரிவித்ததும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது, மோசடி கும்பலை கண்டுபிடிக்க மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
