உத்தரபிரதேசத்தில் உள்ள  மாவ் மாவட்டம், கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ரோதஷியாம் மவுரியா, ஒரு பாலித்தீன் பையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது செயலில் சந்தேகம் கொண்ட போலீசார், பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு சிறிய நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மவுரியாவிடம் விசாரித்தபோது, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பாம்பை அலுவலகத்தில் விட வந்ததாகக் கூறினார். இதற்குக் காரணம், அவரது மனைவி இறந்த பிறகு, ரேஷன் கார்டில் இருந்து அவரது மனைவி  பெயரை நீக்கும்போது, மவுரியாவின் பெயரையும் அதிகாரிகள் தவறுதலாக நீக்கியது.

இதனால், கடந்த  இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்த அவர், பலமுறை மனு அளித்தும் பிரச்சினை தீராமல், இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

போலீசார் பாம்பை பறிமுதல் செய்து, மவுரியாவின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க விவசாயி எடுத்த இந்த அசாதாரண முயற்சி, மாவ் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.