கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி காவல் எல்லைக்குட்பட்ட சின்னயன பாளையா, ஸ்ரீராம் காலனியில் வசிக்கும் அய்யப்பன் – கஸ்தூரி தம்பதியின் வாடகை வீட்டில் நேற்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அய்யப்பன், சிட்டி மார்க்கெட்டில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மப் பொருள் வெடித்து, வெடிகுண்டு போன்று பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து தரைமட்டமானது.

இதில் கஸ்தூரி வீடு மட்டுமின்றி, அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்தன; சுவர்களில் விரிசல், பொருட்கள் நொறுங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருக்கு போராட, கஸ்தூரி, சரசம்மா உள்ளிட்டோருக்கு தீக்காயமும் ஏற்பட்டது.

ஆடுகோடி காவல்துறையினர், தீயணைப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் கஸ்தூரி, சரசம்மா, சிறுவன் முபாரக் உட்பட 11 பேர் மீட்கப்பட்டு, விக்டோரியா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, முபாரக் (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங் மற்றும் கூடுதல் ஆணையர் ரமேஷ் பானூத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ரமேஷ் பானூத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல் பார்வையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. வெடிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கள்ளசந்தையில் சிலிண்டர் வாங்கப்பட்டதா என விசாரிக்கப்படுகிறது. மொத்தம் 9 சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் நடந்த வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நிபுணர்களின் அறிக்கைக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார். பலியான முபாரக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறிய காட்சி நெஞ்சை உலுக்கியது.