கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவின் ஹொசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும், சுஷ்மா என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின்போது ஸ்ரீமந்த் கேட்ட வரதட்சணையை சுஷ்மாவின் பெற்றோர் வழங்கியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு, சுஷ்மா கூட்டுக் குடும்பமாக கணவர் வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில், மேலும் ரூ.5 லட்சம் ரொக்கமாக வரதட்சணை தர வேண்டும் என அழுத்தம் தரப்பட்டதாக தெரிகிறது.

இந்த அழுத்தங்கள் நாளடைவில் கொடுமையாக மாறின. ஸ்ரீமந்த், சுஷ்மாவை அடித்தும், உதைத்தும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இவரது குடும்பத்தினரும் இந்த கொடுமையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறுகளில் மனவேதனை அடைந்த சுஷ்மா மீது நேற்று யாரும் இல்லாதபோது ஸ்ரீமந்த் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் பரிதவித்த சுஷ்மாவை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, ஹாசன் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சக்லேஷ்புரா புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுமையான இந்த தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.