மேகாலயா மாநிலம், தேசிய அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 6-வது இடத்தில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் எச்.ஐ.வி. பாதிப்பு மிக அதிக அளவில் காணப்படுவதால், திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி. சோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுபோன்று கோவா மாநிலம் ஏற்கனவே மசோதாவை தாக்கல் செய்துள்ள நிலையில், மேகாலயாவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என என்ன காரணம் இருக்கிறது எனவும் அவர் வினவினார்.
முன்னதாக, மாநில துணை முதலமைச்சர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில், எச்.ஐ.வி. பரிசோதனையை சட்டமாக்கும் விஷயம் விவாதிக்கப்பட்டது. இது பொதுசுகாதார பாதுகாப்பிற்கும், எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காகவும் மிக முக்கியமான அடியாக அமையும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தகைய முயற்சி, சமூகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
