பாலிவுட் திரையுலகில் “ராமாயணா” இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படமாகும். அதன்படி இப்படம் சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர்.

மேலும் சன்னி தியோல், விக்ராந்த் மாஸ்ஸி,  லாரா தத்தா, இந்திரா கிருஷ்ணன், விவேக் ஓபராய் மற்றும் அருண் கோபால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 1600 கோடி என கூறப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு தொடர்புடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் இப்படத்திற்கான செலவு ரூ. 4000 கோடியை நெருங்கி உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்தியாவிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களில் ஒன்றாக இது இருக்கும் எனவும் கூறுகின்றனர். இப்படத்தின் இசையை இசை புயல் ஏ.ஆர். ரகுமான், ஆஸ்கர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விஎஃப் எக்ஸ், ஏஐ டப்பிங்  என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து அதில் இடம்பெற்றுள்ள அனிமேஷன் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.