கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பெண் அணிந்திருந்த டி-ஷர்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆஷா என்ற புஷ்பா (39) என்பதும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதால் தன்னுடைய குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சம்சுதீன் (34) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்கள் அசாம் மாநிலத்தில் இருக்கிறார்கள்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூருக்கு வந்த நிலையில் இந்த தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இந்நிலையில் ஆஷா மற்றும் இந்த வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ள உறவு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் வாடகை வீட்டில் கணவன் மனைவி எனக் கூறிக்கொண்டு தனியாக வசித்து வந்தனர். இதில் ஆஷாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வருவார். அதோடு வேறு சிலருடனும் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இது வாலிபருக்கு தெரிய வரவே கோபத்தில் அவர் ஆஷாவை அடிக்கடி கண்டித்துள்ளார்.

இருப்பினும் ஆஷா அதனை கண்டு கொள்ளாத நிலையில் சம்பவ நாளிலும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் வாலிபர் ஆஷாவை கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் உடலை சாக்குப்பையில் கட்டி தன்னுடைய பைக்கில் வைத்து குப்பை வண்டியில் வீசி சென்றது தெரிய வந்தது.

மேலும் இந்த கொலை வழக்கில் போலீசார் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ள நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.