
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று சுமார் 7 அடி ஆழம் கொண்ட சாயகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் சுமார் ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென விஷ வாயு தாக்கியது. இதில் 4 பேர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி சரவணன், வேணுகோபால் மற்றும் ஹரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இரண்டு பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.